நடிகை "சொர்ணாக்கா' சகுந்தலா காலமானார்

"தூள்' படத்தில் "சொர்ணாக்கா' என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை சகுந்தலா (65) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நள்ளிரவு காலமானார்.

ஹைதராபாதில் உள்ள கொம்பள்ளி பகுதியில் வசித்து வந்த சகுந்தலாவுக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சகுந்தலா, நாடகத் துறை மூலம் கலையுலகில் கால் பதித்தார். 1979-ஆம் ஆண்டு "மாபூமி' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குணச்சித்திரம், வில்லத்தனம், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் தெலங்கானா பேச்சு வழக்கில் வசனங்களைப் பேசி நடித்ததால் "தெலங்கானா சகுந்தலா' என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

தமிழில் விக்ரம், ஜோதிகா நடித்த "தூள்' படத்தில் "சொர்ணாக்கா' என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் சகுந்தலா.

ஹைதராபாத் பிலிம் சேம்பர் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.