யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

வடபுலத்தில் இடம்பெற்று வருகின்ற யுத்த நெருக்குவாரங்கள் காரணமாக  மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு நெருக்குவாரங்கள் தொடர்பான உண்மை நிலையினைக் கண்டறிவதில் மேற்குலக நாடுகளின் தூதுவராலங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன.

ஏற்கனவே குடாநாட்டிற்கு அமெரிக்க தூதுவராலயத்தின் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் சென்று திரும்பியுள்ள நிலையில் தற்போது சுவிஸ் மற்றும் நோர்வே உயர்மட்டக்குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதுவராயத்தின் முதன்மைச் செயலாளரான றோனா ஹரிகன் (frona corigan) நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் நோர்வேத் தூதுவராலயத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் சென்றிருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான  சுவிஸ் தூதுவராயத்தின் முதன்மை அதிகாரி இன்று அரச அதிபரைச் சந்தித்துள்ளார். முன்னதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்திற்கு விஜயம் செய்த அவர் குடாநாட்டில் அணை;மைக் காலமாக நடைபெற்ற கைதுகள் காணாமல் போதல், படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக துருவித் துருவி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிக் கொண்டதாக தெரிய வருகின்றது.

இதனிடையே உயிரச்சுறுத்தல் காரணமாக சரணடைந்து யாழ் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்திப்பதற்கான நீதிமன்ற அனுமதியையும் அவர்கள் கோரியுள்ளனர். நாளைய தினம் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம் செய்யும் அவர்கள் யாழ் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வருடக் கணக்கில் தங்கியுள்ள கைதிகளையயும் சந்தித்து உரையாடுவர் எனத் தெரிவிக்கப்பிகின்றது.

இதனிடையே தெல்லிப்பழையில் படையினரின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் புனர்வாழ்வு முகாமிற்கும் இக்குழுவினர் செல்லவுள்ளதாகவும் இதற்கான அனுமதியையும் அவர்கள் கோரியிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இதனிடையே குடாநநாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலவுகின்ற தட்டுப்பாடுகள் தொடர்பான விபரங்களையும் அரச அதிபரிடம் அவர்கள் கோரிப் பெற்றுள்ளனர். குறிப்பாக குடாநாட்டில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் நிர்ணய விலை தொடர்பான பட்டியலையும் மாவட்ட செயலகத்தில் இவர்கள் கோரிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கடந்த வாரம் இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவராலய பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் சென்று திரும்பியுள்ள நிலையிலேயே தற்போது முதன்மைச் செயலாளர் சென்றுள்ளார். சுவிஸ் அபிவிருத்தி நிலையம் எனும் அமைப்பினால் குடாநாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்கு நால்வர் கொண்ட குழு யாழ்ப்பாணம் சென்றிருந்தது.

இதனிடையே குடாநாட்டில் சுவிஸ் அபிவிருத்திக் குழுவினால் நிர்மாணிக்கப்பட்ட நிர்மாண வேலைகளைத் திறந்து வைப்பதற்கு சுவிஸ் தூதுவர் யாழ்ப்பாணம் செல்ல முற்பட்ட வேளையிலும் பாதுகாப்பு அமைச்சு அதற்கான அனுமதியை வழங்கியிருக்கவில்லை எனத் தெரிய வருகின்றது. இந்தநிலையிலேயே முதன்மைச் செயலாளர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக புலம் பெயர்ந்த கணசமானோர் சுவிஸ் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களது விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான ஒரு சாதகமான நடவடிக்கையாகவே குடாநாட்டிற்கான இந்த விஜயமும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது