இந்திய மருத்துவக் குழு

இந்திய மருத்துவக் குழுவொன்று எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு  வருகைதரவுள்ளதாக இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வன்னியில் காயமடைந்து திருகோணமலைக்கு வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பொருட்டே அக்குழு இலங்கை வரவுள்ளதாகவும் புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர மருத்துவப் பிரிவை அமைக்கும் நோக்கிலேயே அந்த மருத்துவக் குழுவினர் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் இலங்கை அரசாங்கத்துடன் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை வரும் இந்திய மருத்துவ குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளதுடன் அந்த மருத்துவ குழுவில் அனுபவம் வாய்ந்த 08 வைத்திய நிபுணர்கள் சத்திரசிகிச்சை வல்லுனர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்த மருத்துவ குழுவினர் 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களையும், வைத்திய உபகரணங்களையும் சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.