தமிழர் கொலைகளைத் தடுத்துநிறுத்த மலேசிய அரசு தலையிட வேண்டும் அந்நாட்டு அமைச்சரிடம் தமிழ் அமைப்புகள் கோரிக்கை

 

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து மலேசிய அரசு உடனடியாகத் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் எனக் கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ சிறீ டாக்டர் ராய்ஸ் யாத்தியிடம் நேற்றுமுன்தினம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய இந்தியக் காங்கிரஸ் (ம.இ.கா.) தலைமைச் செயலாளரும் மனிதவள அமைச்சருமான டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் சென்ற குழுவினர், அமைச்சர்ராயிசிடம் இந்த மனுவை கையளித்தனர்.
உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் சட்டத்தரணி பசுபதி சிதம் பரம், மலேசிய இந்தியக் காங்கிரஸ் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.மோகன் உட்பட எண்மர் அடங்கிய குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் ராயிசிடம் இந்த மனுவை சமர்ப்பித்து இந்த விடயத்தில் மலேசியா கொண்டிருக்க வேண்டிய கடப்பாட்டை விளக்கினர் என இணையத்தளத் தகவல் தெரிவித்தது.