பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கின்றது.

img.08362_t[1] இலங்கையின் 61 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாளை நடைபெறவுள்ளதை  முன்னிட்டு தலைநகர் கொழும்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கின்றது.
கொழும்பில் பல்லாயிரக்கணக்கான பொலிஸாரும், படையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை போன்ற தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களில் தேடுதல்களும்,சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காலி வீதி உட்பட தலை நகரின் முக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத்தடைசெய்யப்பட்டிருக்கின்றன.சுமார் 4 ஆயிரம் பொலிஸாரும் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பின் வான் பகுதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர். பம்பலப்பிட்டியிலிருந்து மருதானை வரையிலான ரயில் சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமல மெடிவகே தெரிவித்தவை வருமாறு: வடபகுதியில் பாரிய தோல்வியை சந்தித்துள்ள தருணத்தில் விடுதலைப் புலிகள் கொழும்பில் சுதந்திர தின நிகழ்வுகளை குழப்ப முயலலாம் என்பது தெளிவாகியுள்ளது. கடந்த சில நாள்களில் பொலிஸாரும் முப்படை யினரும் பல கிளைமோர் குண்டுகளையும் தற்கொலை அங்கிகளையும் கண்டு பிடித்துள்ளனர். இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வின் போது கொழும்பிற்கும் அதன் புறநகர்ப்  பகுதிகளுக்கும்  ஆகக்கூடுதலான பாதுகாப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
61 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இடம்பெறும். இதற்கு போதிய பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக பொலிஸாரும் முப்படையினரும் விசேட போக்குவரத்துத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
கொள்ளுப்பிட்டிசெரெமிக் சந்தியிலிருந்து இராணுவத் தலைமையகம் வரையிலான பகுதி மூன்றாம், நான்காம் திகதிகளில் முழுமையாக மூடப்படும்.
கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவங்களை கருத்திற்கொண்டு பம்பலப்பிட்டி முதல் மருதானை வரையிலான ரயில் சேவை நேற்றிரவு 12 மணியுடன் இடை நிறுத்தப்பட்டது. நான்காம் திகதி மாலை வரை இந்தத் தடை நீடிக்கும் என்றார். நேற்றுக் காலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட தேடுதலில் 28 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  பொறல்லை, மருதானை, கொழும்பு 7 மற்றும் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட தேடுதலில் வாகனங்கள் அனைத்தும் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.  பயணிகளின் பஸ்களும் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. இதன்போது ஐந்து பெண்கள் உட்பட 28 தமிழர்கள் கைதாகினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதலில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பலர் நீண்ட நேரமாக வீதி ஓரமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். கைதான இளைஞர்கள், யுவதிகள் வடக்கு  கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது