ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தீர்மானம்

இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் ஊடாகவே நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் சிவிலியன்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவிலியன் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து மோதலில் ஈடுபட்டு வரும் தரப்பினர் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்வதேச யுத்த சட்ட விதிகளுக்கு அமைவாக யுத்தத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கப் படையினரிடமும், விடுதலைப் புலிகளிடமும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
யுத்த பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு சிவிலியன் பாதுகாப்பாகச் செல்ல இரு தரப்பினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் சிக்கியுள்ள சிவிலியன்களது மனிதாபிமான தேவைகைள மதிப்பீடு செய்ய சர்தேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
250,000 சிவிலியன்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடையின்றி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது