ஆயுதங்களை களைந்து பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு

ஆயுதங்களை களைந்து பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குருணாகல் நகரில் நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சரணடையாத பட்சத்தில் பிரபாகரன் முல்லைத்தீவு கடற்பரப்பில் குதிப்பதனைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது கனவுகள் ஒவ்வொன்றாக கலையத் தொடங்கியுள்ளதாகவும், நிலப்பரப்புக்களை நாளுக்கு நாள் படையினர் கைப்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பாவிச் சிவலியன்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருப்பதாகவும், உடனடியாக சிவிலியன்களை விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
சிவிலியன்களை விடுதலை செய்து, நிபந்தனையற்ற வகையில் விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சொற்ப காலத்தில் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துவிட முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்

கொழும்புச்செய்தியாளர்