களநிலவரம்

610x[1] புலிகளின் பலத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக்கலாம் என்பதே படைத்தரப்பின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.
அதனால் புலிகளுக்குச் சாதகமற்ற களமுனைகளை அரசபடைகள் தெரிவு செய்கின்றன.ஆனால் இதுவரையில் படையினர் கைப்பற்றியிருக்கின்ற பகுதிகள் முன்னர் இராணுவத்துக்குப் பழக்கப்பட்ட பிரதேசங்கள் தான்.ஏதோ ஒரு காலத்தில் படையினர் கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் தான் இவை.ஜெயசிக்குறு காலத்தில் அம்பகாமம், ஒட்டுசுட்டான், மாங்குளம், பகுதிகளில் படையினர் நிலைகொண்டிருந்தனர். அதேவேளை பூநகரி, கிளிநொச்சி, ஆனையிறவு என்பனவும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களே.
ஆனால், இப்போது படையினர் சுற்றிவளைத்துப் பிடிக்க நினைக்கின்ற பிரதேசம் அப்படியானதல்ல. முல்லைத்தீவு நகரம் மட்டும்; தான் படையினருக்குத் தெரிந்த பகுதி.
அதற்கு அப்பாலுள்ள புதுக்குடியிருப்பு, விசுவமடு, வட்டக்கச்சி, உடையார்கட்டு அடங்கலான அடர்ந்த காட்டுப் பகுதியும், மக்களின் வசிப்பிடங்களும் முன்னெப்போதுமே இராணுவத்துக்குப் பரிச்சயமான ஒன்றல்ல. ஆனால் புலிகளுக்கு அவை அத்துப்படியானது.இங்கே தான் இரண்டு தரப்பும் இனிமேல் ஒளித்துப் பிடித்து விளையாடப் போகின்றனர். இது எப்படிப்பட்ட யுத்தமாக அமையப் போகிறதென்பது பலரதும் கேள்வியாக இருக்கிறது.
புலிகள் இன்னமும் தமது மரபுப் போர்ப்பலத்தை, அதற்கான படையணிகளை, ஆயுதங்களை இழந்து விடவில்லை.
ஆனால், ஆயுத விநியோகமே அவர்களுக்குப் பிரச்சினைக்குரியதாக இருந்தாலும் அதையும் அவர்கள் கடல் வழியாகப் பெறுவது தற்போது உறுதியாகி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் புலிகள் தொடர்ந்து தமது மரபுவழிப் போர்த்திறனைக் கொண்டு படையினரோடு முட்டிமோதப் போகிறார்கள்.
முல்லைத்தீவு நோக்கி இப்போது இரண்டு பக்கங்களில் தான் நேரடியான படை அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது.
தெற்குப் புறத்தால் 59 ஆவது டிவிசனின் 3 பிரிகேட்களும், 64 ஆவது டிவிசனின் 2 பிரிகேட்களும் புலிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.
அதேவேளை மேற்குப் பகுதிகளில் 63 ஆவது, 57 ஆவது 58 ஆவது டிவிசன்களின் தலா 3 பிரிகேட்கள் என்று மொத்தம் 9 பிரிகேட்களின் அச்சுறுத்தலை புலிகள் எதிர்கொள்கின்றனர்.இரண்டையும் சேர்த்;தால் மொத்தம் 14 பிரிகேட் படையினர். இவற்றில் மொத்தம் 42 பற்றாலியன்கள் இருக்கின்றன. துணைச் சேவைப்படை பற்றாலியன்களையும் சேர்த்தால் இது 45 பற்றாலியன்கள் ஆகிறது.
இந்தக் கட்டத்தில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சொல்வது போன்று 100 பற்றாலியன்களையோ, 50 ஆயிரம் படையினரையோ இராணுவத்தால் முல்லைத்தீவுக்குள் அனுப்ப முடியாது.அதெல்லாம் வெறும் பிரசாரமே தவிர நடைமுறைச் சாத்தியமானதல்ல.இலங்கை இராணுவத்தின் 57, 58, 59 ஆவது டிவிசன்களின் பெரும்பாலான பற்றாலியன்கள் அடி வாங்கிக் களைத்துப் போனவை. அவற்றின் ஆட்பலம் கணிசமாகக் குறைந்து போயிருக்கிறது.இந்த பற்றாலியன்களில் சராசரியாக 500 படையினர் இருந்தாலே பெரும் காரியம்.இப்படிப் பார்த்தால் தற்போது முல்லைத்தீவுக்கு நேரடியாக நெருக்குதல் கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கும் 5 டிவிசன்களிலும் மொத்தம் 21 ஆயிரம் படையினருக்கு மேல் இருக்க முடியாது.
இவற்றோடு கிளாலி - முகமாலையில் உள்ள 53, 55 ஆவது டிவிசன்களின் 6 பிரிகேட்களை சேர்ந்த 18 பற்றாலியன்களையும் சேர்த்தால் ஒரு 10 ஆயிரம் படையினர் தேறுவர்.ஆகக்கூடியது எல்லாமாக மொத்தம் 31 ஆயிரம் படையினர் தான் முல்லைத்தீவுக்கு நெருக்கடியைக் கொடுக்க முடியும். 100 பற்றாலியன் 50 ஆயிரம் படையினர் என்பதெல்லாம் சுத்த பம்மாத்து.
இவ்வளவு படையினரையும் கொண்டு தான் தெற்கே மணலாறு, ஒட்டுசுட்டான், மாங்குளம், விடத்தல்தீவு அச்சில் இருந்து வடக்கே கிளாலி –முகமாலை - நாகர்கோவில் அச்சு வரையான பெரும் பிரதேசத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்;டும்.இது வன்னி;ப் போரின் மிக முக்கியமாக கட்டம். புலிகள் எடுக்கப் போகின்ற ஒவ்வொரு நகர்வும் படைத்தரப்பின் இருப்புக்குச் சவாலாகவே அமையலாம்.
புலிகள் பெரும் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 4 டிவிசன் படையினரைத் தடுத்து நிறத்திச் சண்டையிடும் அளவுக்கு தமது பலத்தை காட்டி விட்டு திடீரென்று பின் விலகிக் கொள்வது ஆபத்தானதொரு பொறிக்குள் படையினரை இழுத்துச் செல்வதாகவே தோன்றுகிறது.
அவர்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசம் சுருங்கும் போது ஏற்படக் கூடிய ஆபத்தை உணர்ந்திருக்க மாட்டார்கள் என்றோ, முன்யோசனையின்றிச் செயற்படுவதாகவோ அல்லது பலவீனமடைந்து போய் இப்படிச் செய்வதாகவோ முடிவு செய்துவிட முடியாது.
குறுகிய பிரதேசம் ஒன்றுக்குள் அதுவும் - இராணுவத்;துக்கு முன்பின் பரிச்சயமில்லாத களம் ஒன்றுக்குள் அவர்களை இழுத்துச் செல்ல புலிகள் துணிந்திருக்கின்றனர்.
தமது கோட்டையின் வாசலை நெருங்கும் வரை படையினரை அனுமதிக்க புலிகள் எடுத்திருக்கின்ற தீர்மானம் எந்தளவுக்கு இராணுவ தந்திரோபாய ரீதியானதென்றோ அதன் பெறுபேறுகள் எத்தகையதாக இருக்கும் என்றோ தெரிந்து கொள்ள நீண்டகாலம் காத்திருக்கத் தேவையில்லை.

நிலவரம்