'பாஃப்டா' விருதையும் வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

லண்டன்: கோல்டன் குளோப் விருதை வென்ற ஸ்லம்டாக் மில்லினர் தற்போது பாஃப்டா விருதுக்கும் ஏராளமான பிரிவில் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நான்கு கோல்டன் குளோப் விருதுகளை அள்ளியது ஸ்லம்டாக். ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருதைப் பெற்று இந்தியர்களைப் பெருமைப்படுத்தினார்.
இந்த நிலையில், பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைக் கழகம் (British Academy of Film and TV Arts) வழங்கும் விருதுகளுக்கும் ஸ்லம்டாக் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8ம் தேதி லண்டனில் நடைபெறும் கண் கவர் நிகழ்ச்சியில் பாஃப்டா விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சிறந்த திரைப்படம், அடாப்டட் திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, தயாரிப்பு வடிவமைப்பு, ஒலிப்பதிவு மற்றும் சிறந்த பிரிட்டிஷ் படம் ஆகிய பிரிவுகளில் ஸ்லம்டாக் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோல்டன் குளோப் விருதுகளில் நிகழ்த்திய சாதனையை பாஃப்டா விருதுகளிலும் ஸ்லம்டாக் காட்டுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது